சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதை அமைத்தல், நிறுவுதல் உட்பட அனைத்து பணிகளுக்கும் ரூ.299.46 கோடி மதிப்பில் லார்சன் மற்றும் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில்ஒன்று மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடமாகும்.
ஆரம்ப கட்ட பணிகள்: இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை, பசுமைவழிச் சாலை பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. மற்ற இடங்களில் சுரங்கப்பாதை ஆரம்பக்கட்ட பணிகள் முடிந்த நிலையில், அடுத்தகட்ட பணிகள்நடைபெறுகின்றன. நேருநகர்-சிறுசேரி வரை உயர்மட்டப்பாதை அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் பல இடங்களில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பகுதியில் பாதைகள் அமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் அதன் தொடர்பான அனைத்து வகை பணிகளுக்கும் ரூ.299 கோடியே 46 லட்சம் மதிப்பில் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியின் ஒருபகுதியாக, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்துக்கான கடைசி பாதைக்கான ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் தரப்பில் மெட்ரோ வணிகப் பிரிவின் துணைத்தலைவர் சுனில் கட்டார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் எஸ்.அசோக் குமார், (தடங்கள் மற்றும் உயர்நிலை கட்டுமானம்), கூடுதல் பொது மேலாளர் டி. குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), பொது ஆலோசகர்கள் மற்றும்லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.