தமிழகம்

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு 2022-ல் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை இயற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் அதற்குஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பினார். பின்னர், மீண்டும் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு, ஆளுநர் கடந்த ஏப்.7-ல் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதில், தமிழக அரசின் தடை சட்டத்தால் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு முந்தைய நாளான ஏப்.6-ல் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான திருத்த விதிகளை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இளைஞர்கள் விபரீத முடிவுகளை எடுப்பதற்கும், உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் எதையும் குறிப்பிடவில்லை. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் விளையாட அனுமதிப்பதில்லை.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான சட்டம் இயற்றநாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சட்டம் இயற்றதமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.

ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டத்தை, தமிழக அரசு மீண்டும் இயற்றி உள்ளது. திறமைக்கான விளையாட்டு எது, அதிர்ஷ்ட வாய்ப்பளிக்கும் விளையாட்டு எது என்பதை வேறுபடுத்தாமல், பொத்தாம் பொதுவாக ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது சட்டவிரோதமானது.

எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரப் பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT