உதகை: கோடை சீசனை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதை இன்று நள்ளிரவு முதல் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்துக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கருத்துகேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. உதகையிலிருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்லும் வகையிலும்,
அதேபோல, சமவெளி பகுதிகளிலிருந்து உதகை நோக்கி வரும் வாகனங்கள் பர்லியாறு, குன்னூர் சாலை வழியாக உதகைக்கு வரும் வகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகளை தவிர தண்ணீர் லாரி, கட்டுமானப் பொருட்களை ஏற்றிவரும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நகர்ப்புற சாலைகளில் இயங்க அனுமதியில்லை.
நகரின் நுழைவுப் பகுதியில் ஏற்படுத்தப்படும் அனைத்து பார்க்கிங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏற்படுத்தப்படும். அதேபோல, வாகன நிறுத்துமிடத்தில் உள்ளூர் பேருந்து சேவை இயக்கப்படும்" என்றார்.