சேலம் / தருமபுரி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் வசந்த குமாரி தலைமை வகித்தார். பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் கோடை விடுமுறை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அங்கன்வாடி மைய பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக் கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் என்பதை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்த வேண்டும்.
10 ஆண்டுகள் பணிமுடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தருமபுரியில் போராட்டம்: இதுபோல, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடந்தது.
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். மாநில செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட செயலாளர் கவிதா கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தில், சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.