சென்னை: பதினோராவது ஜோதிர்லிங்க கோயிலான ஸ்ரீ கேதார்நாத் பக்தர்களின் தரிசனத்துக்காக நேற்றுசிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் முதல் வழிபாடு செய்யப்பட்டது. கோயில் திறக்கப்பட்டபோது ராணுவ இசைக்குழுவின் பஜனை கீர்த்தனை, `ஜெய் கேதார்' என்ற கோஷம் ஒலித்தது. மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அறிவுறுத்தலின்படி ஹெலிகாப்டர் மூலம் பக்தர்களின் மீது மலர் தூவப்பட்டது.
கேதார்நாத் கோயில் கதவுகள் திறக்கப்பட்டதும், முதல்வர் தாமி சுவாமியைத் தரிசனம் செய்தார், அப்போது நாடு, மாநிலத்தின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தார். சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்த பக்தர்களையும் முதல்வர் வரவேற்றார்.
கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்டார நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்றார். உத்தராகண்ட் மாநிலத்தின்சார்தாம் யாத்திரையை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முதல்வர் தாமி தெரிவித்தார்.
சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் யாத்திரைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.கடந்த ஆண்டு அனுபவங்களின் அடிப்படையில், யாத்திரைக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கங்கோத்ரி, யமுனோத்ரி யாத்திரை: அசம்பாவிதங்களைத் தவிர்க்க வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை அறிந்து அதன்படி பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் யாத்திரையும் சுமுகமாக நடந்து வருகிறது. ஏப்ரல் 27-ம்தேதி பத்ரி விஷாலின் கதவுகளும் தரிசனத்துக்காகத் திறக்கப்படும். l