சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே மணி, பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர்.  
தமிழகம்

ரயில் மறியல் வழக்கு: பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்பட 5 பேர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்

வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட ஐந்து பேர் இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கடந்த 2018-ம் ஆண்டு பாமக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலம் ரயில்வே ஜங்ஷனில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, நிரவாகிகள் கதிர் ராசரத்தினம், சாம்ராஜ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்க பாமக கவுரவத் தலைவர் ஜிகே.மணி, சட்டமன்ற உறுப்பினர் அருள், வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, பாமக மாநகர் மாவட்ட தலைவர் ராசரத்தினம், பாமக நிர்வாகி சாம்ராஜ் ஐந்து பேர் நீதிமன்றத்தில் இன்று ஆஜகராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வரும் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தொடர்ந்து பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி செய்தியாளர்களிடம் கூறியது: ''40 ஆண்டுகளாக பாமக மதுவுக்கு எதிராக போராடி வருகிறது. மது விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது. தற்போது 660 கடைகள் மூடுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது முழுவதுமாக மூட வேண்டும் என்பதே பாமகவின் கோரிக்கை.

10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து ஆறு மாத கால நீட்டிப்பு என்பது பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு தேவையற்றது. இந்த மாதத்துக்கு உள்ளாகவே முடிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்துகிறோம். அனல் மின் நிலையத்தை ஊக்குவிக்காமல் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT