எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுக்கு தயாராக ஆண்டுதோறும் 100 எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் என்.சுப்ரமணியன் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர் என்.சுப்ரமணியன் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் எஸ்சி, எஸ்டி நலத்துறைக்கு தமிழக அரசு ரூ.3,483 கோடி ஒதுக்கியுள்ளது. 2014-15ம் ஆண்டு பட்ஜெட்டில் மட்டும் ரூ.1998 கோடி ஒதுக்கப்பட்டது. எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை (போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்) திட்டத்துக்கு மட்டும் ரூ.1,636 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் பொறியியல் மாணவர்கள் 71,259 பேர், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 37,146 பேர் பயன்பெற்றுள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் சுப்ரமணியன் கூறினார். பின்னர் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன் விவரம்:
மாணவர்களுக்கு சோலார் விளக்கு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சாரண, சாரணியர் (ஸ்கவுட்) இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்த ஒரு பள்ளிக்கு ரூ.55 ஆயிரம் வீதம் 207 பள்ளிகளுக்கு சுமார் ரூ.1.14 கோடி வழங்கப்படும். ஆதிதிராவிடர்நலப் பள்ளிகளில் டியூப்லைட், ஃபேன், தண்ணீர்க் குழாயைப் பராமரிக்க ஒரு பள்ளிக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.10 கோடி அளிக்கப்படும்.
மலைப்பகுதிகளில் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 13,154 பேருக்கு தலா ரூ.550 மதிப்பில் ரூ.73 லட்சம் செலவில் சோலார் விளக்குகள் வழங்கப்படும்.
கல்விச் சுற்றுலாவுக்கு ரூ.51 லட்சம்
ஆதிதிராவிடர்நலப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல ஒரு பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 207 பள்ளிகளுக்கு ரூ.51.75 லட்சம் அளிக்கப்படும். பொறியியல் படித்து முடிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐஐஎம்) போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பதற்கான ‘கேட்’ பொது நுழைவுத்தேர்வு எழுத ஆண்டுதோறும் சுமார் 100 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.50 லட்சம் செலவிடப்படும்.
யோகா வகுப்பு
ஆதிதிராவிடர்நலப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில் நாப்கின்களை பாதுகாப்பான முறையில் அழிப்பதற்கான ‘நாப்கின் பர்னர்’ 185 பள்ளிகளில் ரூ.25 ஆயிரம் செலவில் அமைக்கப்படும். குன்னூர், கூடலூர் கோட்டங்களில் சிறப்பு தனி வட்டாட்சியர் அலுவலகம் (தாலுகா ஆபீஸ்) புதிதாக தொடங்கப்படும். ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு யோகா வகுப்பு நடத்த 414 ஆசிரியர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
தீண்டாமையை ஒழிக்க ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நடத்தப்படும் மனிதநேய வார விழாவுக்கான நிதியுதவி ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், மாநில அளவிலான விழா நிதியுதவி ரூ.65 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த, தீண்டாமையை ஒழிக்க மாவட்டங்களில் (சென்னை நீங்கலாக) நடத்தப்படும் சமபந்தி போஜன தொகை ரூ.2,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் முதன்மைத்தேர்வுக்கு தயாராவதற்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.