சென்னை: கேஸ் சிலிண்டர்கள் லாரிகளில் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தை மேலும் இரு ஆண்டுகள் நீட்டிக்க எடுத்த முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக்கூறி, ஒப்பந்தத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், கடந்த 2018ம் ஆண்டு தென் மண்டலத்தில் கேஸ் சிலிண்டர்க்ள் கொண்டு செல்ல லாரிகளுக்கு டெண்டர் கோரியது. ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, வங்கிக் கடனைத் திருப்பி செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்தன. இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் பெற்ற சாருமதி, காந்திமதி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வினீத் சுப்பிரமணியன், வழக்கறிஞர் பாவெல் ஆகியோர், "ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் ஒப்பந்தம் பெற்றதால் மூன்று லாரிகளுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தற்போது அதே ஒப்பந்தத்தை நீட்டிக்கும்போது கூடுதல் லாரிகளுக்கு, விரும்பிய தொகையில் டெண்டர் கோர முடியாது. எனவே இந்த நோட்டீசை ரத்து செய்து, புதிய டெண்டர் கோர உத்தரவிட வேண்டும்" என வாதிட்டனர்.
ஆனால், "டெண்டர் விதிகளின்படியே ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 95 சதவீத ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது" என்று எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அனந்த நடராஜன் ஆகியோர் வாதிட்டனர்.
எண்ணெய் நிறுவனங்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஒப்பந்தத்தை நீட்டிக்கும் முடிவு டெண்டர் விதிகளின்படி எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே, நீதிமன்றம் அதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், ஒப்பந்தத்தை நீட்டிப்பை ஏற்பதோ, மறுப்பதோ, மனுதாரர்களின் விருப்பம். ஒப்பந்த நீட்டிப்பை ஏற்பது என மனுதாரர்கள் முடிவு செய்தால் அதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.