தமிழகம்

வெளிநாடுகளில் ரூ.110 கோடி முதலீடு - செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமாக சிமென்ட், ரியல் எஸ்டேட், சர்வதேச ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிறுவனங்கள் என இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. செட்டிநாடு குழுமத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்நிலையில், செட்டிநாடு குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, கடந்த 2015மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் செட்டிநாடு குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையில் ரூ.23 கோடி பணம், தங்கம், வெள்ளி நகைகள், சொத்துகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.700 கோடிவரி ஏய்ப்பு செய்ததும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, வெளிநாடுகளில் செட்டிநாடு குழுமம் ரூ.110 கோடி முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை வைத்ததற்கான ஆதாரங்களும் அதில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, வெளிநாடுகளில் ரூ.110 கோடி சொத்துகள் இருப்பது தொடர்பாக வருமான வரித்துறை அளித்த ஆவணங்களின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அந்த வகையில், செட்டிநாடு குழுமம், எந்த அடிப்படையில் வெளிநாடுகளில் ரூ.110 கோடி முதலீடு செய்தது என்பது குறித்து அந்நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, மும்பை உள்ளிட்ட செட்டிநாடு நிறுவனத்துக்குச் சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நேற்று நடந்தது. சென்னையை பொறுத்தவரை அண்ணாசாலை, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் காலை முதல் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், ஓரிரு நாட்களில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பீடு செய்து, அது தொடர்பான விரிவான அறிக்கையை வெளியிடுவதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

SCROLL FOR NEXT