சென்னை: ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ, அவர்கள் கட்டுப்பாட்டிலோ இல்லை என்றும், எந்த ஊழலும் நடைபெறவில்லை என்றும் அந்நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு, ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் நிறுவனத்தின் விளக்கம்: எங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் எங்கள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பணியாளர்கள், பொதுமக்களிடையே பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. இது எங்கள் வியாபாரத்தில் மறைமுகத் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எங்கள் நிறுவனம் கடந்த 2012-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். எங்கள் நிறுவனம் ஜி ஸ்கொயர் என்ற பெயரில் கட்டுமானத் துறையில் இயங்கி வருகிறது. மற்ற நிறுவனங்கள் கூட்டாக ஜி ஸ்கொயர் குரூப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும், அதேநேரம் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுபவர்களாக நாங்கள் இயங்கி வருகிறோம்.
கடந்த 2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே, எங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு லாபம் ஈட்டுவதாகவும், ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தரவுகள் இல்லாத வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.
பாஜக தலைவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்னரே எங்கள் நிறுவனம் வியாபாரம் செய்து வருகிறது. எங்கள் நிறுவனம் எந்தவிதமான ஊழல்களிலும் ஈடுபட்டதில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை.
இது தொடர்பாக வெளியான வீடியோவில், ஜி ஸ்கொயர் உரிமையாளர்கள் திமுக குடும்பத்தினர் என்றும், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.38,827.70 கோடி என்றும், இது ஊழல் பணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.
எங்கள் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமானதோ, அவர்கள் கட்டுப்பாட்டிலோ இல்லை. தேசிய கட்சியில் பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர், இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது வருத்தம் அளிக்கிறது. சொத்து மதிப்பும் தவறானதாகும். இது, மொத்த நிலத்தையும் நாங்களே வாங்கி வைத்திருப்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனத்தின் வருமானமாக குறிப்பிட்டுள்ள தொகையும் முற்றிலும் தவறானது. நாங்கள் வாங்கி விற்ற நிலங்களுக்கு, எங்களிடம் முறையான ஆதாரங்கள் உள்ளன. சில திட்டங்களில் பூர்வாங்க ஒப்பந்தங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன. ஆனால், அனைத்தும் ஜி ஸ்கொயர் சொத்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் மற்றும் குழு நிறுவனங்களின் சொத்து மதிப்பாக குறிப்பிட்டுள்ள தொகை, தவறான முறையில் நாங்கள் சொத்து சேர்த்திருப்பதாக மக்களை நம்ப வைக்கும்படி ஜோடிக்கப்பட்டுள்ளது.
உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள முறையான விளக்கங்கள், தகவல்களைத் தரத் தயாராக உள்ளோம். இவ்வாறு விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.