ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார். 
தமிழகம்

திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தால் மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கருத்து

செய்திப்பிரிவு

ஈரோடு: திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரின் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றால், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார்.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது: திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரின் அதிகார துஷ்பிரயோகம் போன்ற செயல்களால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள், பிரதமர் மோடி தலைமையில் மாற்றத்தை விரும்புகின்றனர். மத்திய அரசு தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும், தங்களது திட்டங்களாக தமிழக அரசு கூறி வருகிறது. எனவே, பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மக்களை அணுகி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரிவித்து வருகிறோம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசும்போது, தமிழ் மொழி, கலாச்சாரம் குறித்து பெருமையாகக் குறிப்பிட்டு வருகிறார்.

தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. ஆனால், திமுக அரசும், அதன் அமைச்சர்களும், மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

திமுக அரசு குறித்தும், அவர்களது கொள்கை குறித்தும் தமிழகமக்கள் தற்போது புரிந்து கொண்டுவிட்டனர். விரைவில் இதற்கு முடிவு கட்டி, மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளனர்.

50 சதவீத தொகுதிகள்: வரும் 2024-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. பாஜகவில், இளைஞர்கள், பெண்களை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

இதோடு, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், திமுக, அதிமுக தலைவர்களையும் நமது கட்சியில் இணைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ.சி.சரஸ்வதி, பாஜக மாவட்டத் தலைவர் வேதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT