ஈரோடு: ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு உரிய ஆவணங்களின் அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2007-க்கு முன்பு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீடுகள், 2011-ம் ஆண்டுக்கு முன்பு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தொழில் நிறுவன கட்டுமானங்களுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, அனுமதி வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
ரியல் எஸ்டேட்களுக்கு டிடிசிபி அனுமதியை பொறுத்தவரை, உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அங்கு நடக்கும் வருமானவரித் துறை சோதனைக்கும், டிடிசிபி அனுமதிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ஜி ஸ்கொயர் நிறுவனம் 2013 முதல் செயல்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள் உரிய ஆவணங்களுடன் ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. அதுபோலவே ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் உரிய ஆவணங்களின் அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.