தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி 325 பேருக்கு முனைவர் பட்டங்களை வழங்கினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, முன்னாள் காவல் துறை அதிகாரிகள் கு.பெரியய்யா, அ.கலியமூர்த்தி உட்பட 325 பேருக்கு முனைவர் பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
2 மாணவர்கள் வெளியேற்றம்: முன்னதாக, தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கருப்புச் சட்டை, அதன் மீது வெள்ளை அங்கி அணிந்து எம்.பில் பட்டம் பெற வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.அரவிந்த்சாமியை, போலீஸார் அரங்குக்கு வெளியே அழைத்துச் சென்று, தனி அறையில் வைத்து விசாரணை செய்தனர். 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் விழா அரங்குக்கு அவரை போலீஸார் அழைத்து வந்தனர்.
ஆனால், விழா அரங்குக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்ததும், அரவிந்த்சாமியை போலீஸார் மீண்டும் வலுக்கட்டாயமாக அரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்று, தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டனர்.
இதேபோல, முனைவர் பட்டம் பெற வந்த தமிழ்நாடு மாணவர் கூட்டியக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜான் வின்சென்ட் என்பவரையும் போலீஸார், பட்டம் பெறுவதற்கு முன்பாக வலுக்கட்டாயமாக அரங்கத்திலிருந்து வெளியே அழைத்துசென்றனர். ஆளுநர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்ற பின்னர், அரவிந்த்சாமி, ஜான் வின்சென்ட் ஆகியோருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பட்டங்களை வழங்கினார்.