மதுரை: மதுரை மாவட்டத்தில் 5 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும், என மதுரை ஆட்சியரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியரிடம், மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் அளித்த மனு: மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5 முதல் மே 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். போதையில் வரும் நபர்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களை சீண்டு வது, நகை பறிப்பது, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இதனால், சட்டம்-ஒழுங்கு பாதிப்பும் ஏற்படும். எனவே, மே 5 முதல் 9-ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை முட உத்தரவிட வேண்டும்.
சித்திரை திருவிழாவில் கடந்தாண்டு போல் உயிர்பலி ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்து ராமன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத் தலைவர் குமார், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், மகளி ரணி தலைவி மீனா, ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் சரவணன், சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மனு அளிக்க உடன் சென்றிருந்தனர்.