மதுரை: தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அருகேயுள்ள திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் திருஞான சம்பந்தர் பாடல் பதியப்பட்ட தங்க ஏடு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருவேடகத்தில் பழமையான சிவத்தலமான ஏடகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக் குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது கோயிலில் தங்க ஏடும், கோயில் வரவு - செலவு கணக்கு அடங்கிய சுவடிக் கட்டும் இருந்தன. தமிழகத்தில் முதல்முறையாக தங்க ஏட்டில் பக்தி இலக்கியப் பாடல் பதிந்த நிலையில் கிடைப்பது இதுவே முதல்முறை எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயில்கள், மடங்களின் ஓலைச் சுவடிகள் பாதுகாப்புபராமரிப்பு நூலாக்கத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சிநிறுவனத்தின் சுவடித்துறை பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 45 ஆயிரத்துக்கும் மேலான கோயில்களில் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை 200-க்கும் அதிகமான கோயில்களில் கள ஆய்வு செய்துள்ளோம்.
திருவேடகம் கோயிலில் சுவடிக்கள ஆய்வாளர்கள் கோ.விசுவநாதன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு செய்தபோது, தங்கத்தால் செய்யப்பட்ட தங்க ஏடு, ஒலைச்சுவடிக் கட்டையும் கண்டறிந்தனர். அவற்றை ஆய்வு செய்தபோது தங்க ஏட்டில் திருஞானசம்பந்தர் இயற்றிய பாடல் ஒன்று எழுதப்பட்டுள்ளதையும், ஓலைச்சுவடியில் கோயில் வரவு - செலவு விவரத் தகவல்கள் இருப்பதையும் உறுதி செய்தேன்.
இலக்கியப் பாடல் தங்க ஏட்டில் பதிந்த நிலையில் கிடைப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை. கோயில் தல புராணப்படி திருஞானசம்பந்தர் ‘வாழ்க அந்தணர்’ எனும் பதிகம் எழுதி, வைகை நதியிலிட்டதன் நினைவாக அப்பாடலைத் தங்க ஏட்டில் எழுதி பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. எழுதப்பட்ட காலம் பற்றிய குறிப்பு இல்லை. எழுத்தமைதி மூலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாக இருக்கலாம் என்றார்.