சேலம்: சேலத்தில் அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. மது அருந்துபவர்கள் போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்ததால் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.
ஆனால், டாஸ்மாக் கடையை யொட்டி இருந்த பார் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையை அகற்றிய பின்னரும் பாரில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்கம் போல நேற்று காலை முதல் பாரில் மது விற்பனை நடந்துள்ளது. இதையறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பார் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரில் மது அருந்தியவர்களை உள்ளே வைத்து, பாருக்கு பூட்டு போட்டனர்.
பாரை உடனடியாக மூட வேண்டும், பாரில் மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர், டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே இருந்தவர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர்.