சென்னை: தமிழக சட்டபேரையில் `தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவு-2023' மசோதா நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது.
இதற்கு கூட்டணிக் கட்சிகள் உட்பட, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்: தொழிலாளர் உணர்வுகளுக்கும், உரிமைக்கும் இந்த சட்டம் எதிரானது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நடக்கும் திராவிடமாடல் ஆட்சியில், வெளிநாட்டு முதலீட்டைக் காரணம் காட்டி, தொழிலாளர் வேலை நேரத்தை அதிகரிப்பது ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கமும், தொழிலாளர்களைக் குழப்பும். எனவே, இந்த சட்டத்தை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்.
திக தலைவர் கி.வீரமணி: தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான மசோதா, பேரவையில் குரல்வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சம்பளத்துக்காக அதிக நேரம்உழைப்பது என்ற மன நிலையை உருவாக்குவது, மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானது. எல்லாவகைகளிலும் மக்கள் நலன் கருதி செயல்படும் திராவிட மாடல் அரசு, அவப்பெயரை தவிர்க்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சட்டப்பேரவையில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதா, கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை எதற்காகவும் இழக்க முடியாது. இதனால் மாற்ற முடியாத பழிச் சொல்லுக்கு திமுக அரசு உள்ளாக நேரிடும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை சம்பந்தமாக மசோதா நிறைவேற்றப்பட்டது ஏற்புடையதல்ல. இதனால் தொழிலாளர்களின் உடல்நலன் பாதிக்கும். தொழிலாளர்களின் வேலை, உழைப்பு, மன நலம் ஆகியவற்றுக்கு ஏற்ப வேலை நேரம் அமைய வேண்டும். தமிழக அரசு இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர்டிடிவி தினகரன்: தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை குறித்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மீண்டும் ஓர் உழைப்பாளர் பேரெழுச்சியைக் காணப் போகிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இந்த சட்டம் முதலாளித்துவத்துக்கு ஆதரவானதாகும். பாஜகவை எதிர்க்கும் திமுக அரசு, மத்திய அரசைப் போலவே, இந்த மசோதாவை நிறைவேற்றி இருப்பது வரலாற்று துரோகமாகும்.
இவ்வாறு அறிக்கைகளில் கூறி யுள்ளனர்.
இதேபோல, வி.கே.சசிகலா, தமிழ் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.