தமிழகம்

புது நிபந்தனைகள் அதிமுக பொதுச்செயலர் தேர்தலுக்கு விதிக்கப்பட்டது ஏன்? - ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் உட்பட 4 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இரண்டாவது நாளாக நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிடுகையில், ‘‘கடந்த 2021 டிசம்பரில் நடந்தசெயற்குழுவில் எடுத்த முடிவின்படி ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. ஜூன் 23 பொதுக்குழுவில் அதற்கான தீர்மானமும் முன்வைக்கப்படாத சூழலில், இந்த பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படிகூற முடியும்?. இதை கருத்தில்கொள்ளாமல் தனி நீதிபதி, ஜூலை11-ல் நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனக்கூறியிருப்பது சட்டவிரோதமானது. சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்என எந்த தேர்தலுக்கும் விதிக்கப்படாத புதிய நிபந்தனைகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு மட்டும் விதிக்கப்பட்டது ஏன்?’’ என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த புதிய நிபந்தனைகள் முன்பிருந்தே பின்பற்றப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, இதற்கு முன்பாக இப்படியொரு நிபந்தனைகள் எந்த தேர்தலுக்கும் விதிக்கப்படவில்லை என பதிலளித்த மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், இந்த நிபந்தனைகள் இபிஎஸ் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிட வேண்டும். அவர் மட்டுமே போட்டியின்றி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இபிஎஸ் என்ற தனி நபரின் ஒட்டுமொத்த சுயநலனுக்காகவும் கொண்டு வரப்பட்டவை. இது உள்கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது.

ஓய்வுபெற்ற நீதிபதியை வைத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியிருந்தால் கட்சியில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கும். எனவே கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரையும் நீக்கியது செல்லாது என அறிவி்த்து, ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டும், என வாதிட்டார்.

ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிந்ததையடுத்து, இபிஎஸ் தரப்பு வாதத்துக்காக வழக்கை ஏப்.24-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT