அமைச்சர் பி.மூர்த்தி | கோப்புப் படம் 
தமிழகம்

முத்திரை தீர்வை உயர்வால் சாதாரண மக்களுக்கு பாதிப்பில்லை: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: முத்திரைத் தீர்வை உயர்வு அறிவிப்பால், சாதாரண மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று இந்திய முத்திரை சட்ட திருத்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், முத்திரைக் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: இந்தியமுத்திரைச் சட்டப்படி, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் பயன்படுத்தும் பல வகையான ஆவணங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வை நிர்ணயிக்கப்படுகிறது. சில வகையான ஆவணங்களுக்கு 1992-ம் ஆண்டிலும், வேறு சில வகை ஆவணங்களுக்கு 2001-ம்ஆண்டும் முத்திரைத் தீர்வை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், சில ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வையை மாற்றியமைக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் மூலம், பொது மக்கள் பயன்படுத்தும் சில வகையான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை குறைக்கப்படுகிறது. முத்திரைச் சட்டத்தில் உள்ள 65 வகையான ஆவணங்களில், வங்கி, நிறுவனங்கள் போன்றவை பயன்படுத்தும் 15 வகையான ஆவணங்களுக்கு மட்டுமே தீர்வை மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் ஆவணங்களுக்கு முத்திரைத்தீர்வை மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முத்திரைச்சட்ட முன்வடிவு 2 முறை கொண்டுவரப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஒப்புதல் பெறப்படாமல் திரும்பப் பெறப்பட்டன.

அப்போது 38 வகை ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை திருத்தம் செய்ய முன்மொழிவு செய்யப்பட்டது. ஆனால்தற்போது 15 வகையான ஆவணங்களுக்கு மட்டுமே திருத்தம் செய்ய முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. முத்திரைத் தீர்வையை தற்போது திமுக அரசு உயர்த்தியுள்ளது என்பது தவறானதாகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT