சீமான் | கோப்புப்படம் 
தமிழகம்

“அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தூக்கிவிடுவார்கள் என்பதே வருத்தம்” - சீமான் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: "பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் யாரிடமோ பேசியுள்ளார். அதைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் எவ்வளவு சம்பாதித்துள்ளனர் என்ற விவரங்களை, அவர் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு தெரியாதா?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ‘உதயநிதி ஸ்டாலின், சபரீசன் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்’ என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு வந்து தனிப்பட்ட முறையில் இதைப் பதிவு செய்ததற்கு நான் பெருமிதம் அடைகிறேன். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒருவர்தான், தனது தொகுதியில் வாக்குக்கு காசு கொடுக்காமல் வென்றவர். அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், தொகுதிதோறும் வந்து, தொகுதி பிரச்சினைகள் குறித்த புகார்களை ஆட்கள் மூலம் பெற்று, ஏதாவது புகார்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் வேலைகளைச் செய்தவர் அவர்தான்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் யாரிடமோ பேசியுள்ளார். அதைப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் எவ்வளவு சம்பாதித்துள்ளனர் என்ற விவரங்களை, அவர் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு தெரியாதா? திமுகவில் இருப்பதில் அவர் ஒருவர் உருப்படியானவர். இந்தப் பிரச்சினையின் காரணமாக அவரை தூக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

அந்த மொழிபெயர்ப்பில், "உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில், அவர்களது மூதாதயரைவிட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது.
இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, அது தோராயமாக 30,000 கோடி ரூபாய் இருக்கும்" என்று தெரிவிக்கப்படிருந்தது. | வாசிக்க > முதல்வர் மவுனம் காப்பது அநீதி: அண்ணாமலை

SCROLL FOR NEXT