மதுரை: இபிஎஸ் அணியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி கட்டிய காரில் பயணித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிச்சாமியும் செயல்பட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தனித்தனி அணியாக செயல்பட்டனர். கட்சியின் பொதுச்செயலர் பதவியை பிடிக்க, எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முயற்சித்தார். இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் இரு தரப்பிலும் வழக்குகள் தொடர்ந்தனர். ஆனாலும், நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவான நிலைப்பாடு வந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையமும், அவரை பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயராமன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ”இனிமேல் அதிமுக கொடியை ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக் கூடாது.” என குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த ஓபிஎஸ், பெரியகுளத்திற்கு காரில் சென்றார். எதிர்ப்புக்கு மத்தியில் அதிமுக கொடி கட்டிய காரில் அவர் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.