தமிழகம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு போட்டி

செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 3 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர்பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இரு தரப்பு கோரிக்கைகளையும் பாஜக ஏற்கவில்லை.

இந்நிலையில், கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பில், பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் டி.அன்பரசன் போட்டியிடுவார் என நேற்று முன்தினம் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ்தரப்பில் நேற்று 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்ட்டது. அதன்படி, பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் எம்.நெடுஞ்செழியன், காந்திநகரில் கே.குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் ஏ.அனந்தராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், சுயேச்சையாகப் போட்டியிடுவது என பன்னீர்செல்வம் தரப்பில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.

SCROLL FOR NEXT