குன்னூர்: நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் கோடை விழா நாட்களில் இங்கு பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
சீசன் நாட்களை தவிர, சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு 500 முதல் 3,500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள், மலர்ச் செடிகள் சிம்ஸ் பூங்காவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில், பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் அடங்கும்.
இந்நிலையில், கோடை சீசன் பழ கண்காட்சிக்கு சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா நடவு செய்யப்பட்டது. தற்போது பச்சை ரோஜாக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இவற்றை காணும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.