தமிழகம்

அனுப்பட்டி இரும்பு உருக்கு ஆலையை மூடக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்: 179 பெண்கள் உட்பட 259 பேர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: பல்லடம் அருகே அனுப்பட்டியில் இயங்கும் இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி, பல்லடத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 179 பெண்கள் உட்பட 259 பேரை பல்லடம் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அனுப்பட்டியில் இயங்கும் இரும்பு உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கிராம மக்கள், விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன் அனுப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். இரும்பு உருக்கு ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பலரும் பேசினர். அனுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணியின் மாநிலச் செயலாளர் சதீஷ், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி ஆகியோரும் பேசினர்.

ஆலையை நிரந்தரமாக மூடும் உத்தரவு வழங்காவிட்டால், அனுப்பட்டி ஊராட்சியில் அனைத்து மக்களும் குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார்அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்பது என போராட்டத்தில் தீர்மானித்தனர்.

இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது 80 ஆண்கள்,179 பெண்கள் என 259 பேரை போலீஸார் கைது செய்து, அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். மண்டபத்திலும் உண்ணாவிரதத்தை பெண்கள் உட்பட அனைவரும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளதால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

SCROLL FOR NEXT