சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திருச்சியில் 24-ல் நடக்கும் மாநாட்டில் முடிவு எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: பொதுக்குழுவுக்கு தடை விதிக்காத காரணத்தாலும் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் இடைக்கால தடை கேட்டதை அந்த அமர்வு ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையிலும் தேர்தல் ஆணையம் இருக்கின்ற சூழலை வைத்து ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளனர். அவர்களாகவே எந்த முடிவையும் எடுக்கவில்லை.
எவ்வாறு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் தரப்பட்டதோ அதேபோல்தான் இரட்டை இலை சின்னம் தரப்பட்டுள்ளது. நிர்வாகிகளையும் சட்டவிதிகளையும் பொருத்தவரையில் தேர்தல் ஆணையம் தங்கள் கருத்துகளை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இறுதி தீர்ப்பு நீதிமன்றத்தில் வருகின்ற வரையில் நாங்கள் அதை பதிவு செய்கிறோம் என்று சொல்லியுள்ளனர். எனவே, இதை ஒரு புதிய பிரச்சினையாக கருதவேண்டிய அவசியமில்லை.
நாங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல ஒவ்வொரு அமர்விலும் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். அதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளதே தவிர வேறு அல்ல.
ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று போட்டார்கள். இப்போது அதை நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் என்று கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளை ஏறி ஏறி கால்கள் தளர்ந்துவிட்டன. அதனால்தான் மக்கள் மன்றத்தை நோக்கி ஏப்ரல் 24-ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து திருச்சி மாநாட்டில் தெரியும்.
2024-க்குள் அனைவரையும் ஒன்று சேர்த்துவிடுவேன் என வி.கே.சசிகலா நம்புகிறார். அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். தேர்தலுக்கு பின்னர்தான் தீர்ப்பு வழங்குவோம் என்று சொன்னார்கள். திடீரென இரட்டை இலை பழனிசாமி தரப்பினருக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது என்று தெரியவில்லை.
பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதால் இனி திமுகவை வலுவாக எதிர்க்கப் போகிறோம் என்று பழனிசாமி கூறலாம். அவர் மட்டுமே எதிர்க்க முடியும். மக்கள் இல்லையே. ஈரோடு தேர்தலில் பாஜக ஆதரவு இல்லை எனில் அதாவது, வடஇந்திய தொழிலாளர்கள் 16 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை என்றால் அதிமுகவுக்கு டெபாசிட் போயிருக்கும். அதுதான் நிலைமை. பழனிசாமிக்கு தோல்வி தொடர்கிறது. அவரை முன்னிலைப்படுத்த வேண்டாம் என்று செயற்குழு கூட்டத்தில் நான் முன்னரே சொன்னேன்.
எனது அனுபவத்தில் சொல்கிறேன். கடந்த 67 ஆண்டுகளாக அரசியலில் பார்க்கிறேன். எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் இடையே போட்டிவந்தபோது எம்ஜிஆரை அங்கீகரித்தனர். அதேபோல், ஜெயலலிதாவுக்கும் ஜானகிக்கும் இடையிலான போட்டியின்போது ஜெயலலிதாவை அங்கீகரித்தனர். எனவே, பொதுமக்கள் சரியாக முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.