தமிழகம்

சட்டநாதர் கோயிலிலேயே செப்பேடுகள் வைக்க வைகோ வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலில், கடந்த 16-ம் தேதி நிலத்துக்கு அடியில் இருந்து 23 செப்புத் திருமேனிகள், 412 செப்பேடுகள் மற்றும் பூஜைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் வரும் மே 24-ம்தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதற்காக யாகசாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்தபோது, செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற அப்பர் சுவாமிகள் ஆகியோரது தேவாரப் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழுக்காக வாழ்ந்தவர்களின் பாடல்கள் பொறிக்கப்பட்ட செப்பேடுகள் 750 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்து, நம் காலத்தில் கிடைத்திருப்பது வரலாற்றுச் சம்பவமாகும்.

இந்த வரலாற்றுச் செப்பேடுகள், சீர்காழி சட்டநாதர் கோயிலிலேயே வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக சிறப்பு அறை கட்டப்பட்டு, அதில் செப்பேடுகளை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT