தமிழகம்

தவறான சிகிச்சையால் சிறுமி கால் பாதிப்பு: தேசிய குழந்தைகள் ஆணையம் மருத்துவர்களிடம் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: தவறான சிகிச்சையால் சிறுமியின் கால் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுதொடர்பாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு சிறுமிக்கு மாற்று பாதம் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமை காவலரின் மகள்: சென்னை காவல் துறை தலைமைக் காவலர் ஒருவர், தனது மகளுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அந்தக் குழந்தையின் கால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து ஏப்ரல் 13-ம் தேதி தலைமைச் செயலக வாசலில் தனது மகளுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விரிவான விசாரணைக்கு பிறகு, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணை நடத்தியது. மருத்துவர்களிடம் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. நெப்ராடிக்ஸ் சின்டம் என்ற நோய் சிறுமியை பாதித்துள்ளது. மற்றபடி, சிறுமிக்கு தவறான சிகிச்சை கொடுக்கப்படவில்லை. சிறுமியின் கால் வீங்கியதால்தான் அவரால் சரியாக நடக்க முடியவில்லை.

விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் இதுகுறித்து தெளிவுபடுத்தினோம். மேலும், ஒரு மருத்துவக்குழு அமைத்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, சிறுமியின் மேல் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவருக்காக மாற்று பாதம் பொருத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT