கோப்புப் படம் 
தமிழகம்

கரூரில் வனத்துறை அனுமதி கிடைப்பதில் இழுபறி - சிவகங்கைக்கான காவிரி குடிநீர் திட்டத்துக்கு சிக்கல்

இ.ஜெகநாதன்

சிவகங்கை: கரூரில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு வனத்துறை அனுமதி கிடைப்பதில் இழுபறி நீடிப்பதால் சிவகங்கை காவிரி குடிநீர்த் திட்டப் பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் செயல் படுத்தப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகள் பயன்பெற்று வருகின்றன. மற்ற பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்துக்கு தனியாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல் படுத்த 2013-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன் பின்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ரூ.1,752.73 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் உள்ள 2,452 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும். இதன் மூலம் 11.39 லட்சம் மக்களுக்கு தினமும் 49.83 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்துக்காக கரூர் மாவட்டம் குளித்தலை, தண்ணீர்ப்பள்ளி, மருதூர், பேட்ட வாய்த்தலை, குமாரபாளையம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறுகள், மருதூரில் 43.85 லட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, பாதிரிப்பட்டியில் 43.85 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்டத் தொட்டி, தென்னம்மாள் பட்டியில் 146 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டி அமைக்கப்படுகின்றன.

இதுதவிர சிவகங்கை மாவட்டத்தில் 381 தரைமட்டத் தொட்டிகள், 768 மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்படுகின்றன. 4,282.82 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், ஆக.31-ம் தேதிக்குள் திட்டத்தை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கரூர் மாவட்டம் மருதூரில் வனப் பகுதியில் அமையும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு வனத் துறை அனுமதி கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் பணிகள் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், வனத் துறையிடம் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினர்.

SCROLL FOR NEXT