தமிழகம்

மாற்று திறனாளி கிரிக்கெட் அணி கேப்டனுடன் வாக்குவாதம்: அரசு பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு மதுரை செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்றார். அப்போது கழிப்பறை வசதியுடன் கூடிய விரைவுப் பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.

இதில் சலுகை கட்டணத்தில் பயணிக்க மாற்றுத் திறனாளிகளுக்குஅனுமதி இல்லை என்பதால் பேருந்தில் ஏறக்கூடாது எனப் பேருந்து நடத்துநர் ராஜா கூறியுள்ளார்.

மிரட்டல் விடுத்த நடத்துநர்: இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என சச்சின் சிவா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சச்சினுக்கு நடத்துநர் ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து நடத்துநர் ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 18-ம் தேதி இரவு சென்னை கோயம்பேட்டிலிருந்து மதுரை சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்தில் பயணம் செய்ய முற்பட்ட ஒரு மாற்றுத் திறனாளி பயணியிடம் பேருந்தின் நடத்துநர் ராஜா, கண்ணிய குறைவாக நடந்து கொண்டுள்ளார்.

இதன் காரணமாகச் சம்பந்தப்பட்ட நடத்துநரைஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உடனடியாக பணியிடைநீக்கம் செய்துள்ளது. தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT