தமிழகம்

கச்சத்தீவு விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் பேட்டி

செய்திப்பிரிவு

கச்சத்தீவு விவகாரத்தை மறுபரிசீலனை செய்து ஒரு உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினரின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் கட்சியை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்த திட்டங்கள் பற்றியும் விரிவாக விவாதித்தோம்.

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரிடம் கிடைத்து வரும் ஆதரவையும், மாநிலங்களில் பெருகி வரும் ஆதரவையும் ஒருங்கிணைக்க வேண்டிய சவால் பாஜகவுக்கு உள்ளது.

மேலும் தமிழர்களின் நலனுக்கு மத்திய அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும். காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர் நலன் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். திருப்பூர், ஈரோடு, கோவை, சிவகாசி, கரூர் போன்ற தொழில் நகரங்களின் தரத்தை உயர்த்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

கச்சத்தீவை சொந்தம் கொண்டாட முடியாது என்று மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளதே?

இந்த மனுத்தாக்கல் நடைமுறைகள் ஏற்கெனவே இருந்த ஐ.மு. கூட்டணி அரசின் வழிமுறையில் தொடர்வது போல் உள்ளது. கச்சத்தீவை சொந்தம் கொண்டாட முடியாது என்று நரேந்திர மோடியின் அரசு தலையிட்டு மனுவில் எதையும் சொல்லவில்லை. மேலும் கச்சத்தீவு மட்டுமே மீனவர்களின் பிரச்சினைகளுக்கு காரணமில்லை. இந்த விஷயத்தில் பாஜகவின் பார்வை ஒன்றாக இருந்தாலும் இந்திய அரசு கையாள வேண்டிய முறை வேறாகும். கச்சத்தீவு ஒப்பந்தமே சரியானபடி நிறைவேறவில்லை. எனவே இந்த விவகாரத்தை மறு பரிசீலனை செய்து இந்திய அரசு உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ரயில் டிக்கெட் உயர்வு என காங்கிரஸ் அரசு செய்ததை பாஜக அரசும் செய்கிறதே?

பாஜக அரசு அமைந்து கிட்டத்தட்ட 50 நாட்கள்தான் ஆகிறது. கடந்த காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாக முறையால் நிறைய நிதி சிக்கல் உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டார். இவற்றை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்ய முடியும்.

தமிழகத்தில் தே.ஜ கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் என எல்லோருமே கலந்து கொண்டார்கள். இன்றுவரை தே.ஜ கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

SCROLL FOR NEXT