நாமக்கல்: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 11 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட அறை திடீரென மூடப்பட்டது.
இதைக் கண்டித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூய்மைப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இது குறித்து, தூய்மைப் பணியாளர்கள் கூறியதாவது: மருத்துவமனையில் 17 தூய்மைப் பணியாளர்கள் இருக்க வேண்டும். எனினும், 11 பேர் மட்டுமே உள்ளோம். இச்சூழலில் மருத்துவமனை கழிவுகளை தரம் பிரித்து தர வேண்டுமென வற்புறுத்துகின்றனர். ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம் வழங்குவதில்லை. அதேவேளையில் கூடுதல் நேரம் வேலை வாங்கப்படுகிறது.
மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து தர மறுத்ததால் எங்களது ஓய்வறை பூட்டப்பட்டது. இதைக்கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம், என்றனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம், அவர்களை நியமனம் செய்த ஒப்பந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தது.
இதையடுத்து போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.