கோடை வெயில் காரணமாக தூத்துக்குடியில் இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. படங்கள்: என்.ராஜேஷ் 
தமிழகம்

தூத்துக்குடியில் சுட்டெரிக்கும் வெயில்: இளநீர், நுங்கு விலை கடும் உயர்வு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே தூத்துக்குடியில் பகல்நேர வெப்ப நிலை 100 டிகிரியை நெருங்கியுள்ளது.

நேற்று பகல்நேர வெப்பநிலை 97 டிகிரியாக பதிவாகி இருந்தது. வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இளநீர், நுங்கு, பதநீர், தர்ப்பூசணி, கம்மங்கூழ் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

தூத்துக்குடியில் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் இளநீரே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர், தற்போது ரூ.50 முதல் ரூ.55 என்ற விலையில் விற்கப்படுகிறது.

விலை அதிகரிக்கும்: தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலையில் இளநீர் கடை நடத்தி வரும் எம்.கருவேலமுத்து என்பவர் கூறும்போது, “தற்போது பொள்ளாச்சியில் ஒரு இளநீரை ரூ.36-க்கு வாங்குகிறோம். அதனை இங்கே கொண்டுவர ஒரு இளநீருக்கு ரூ.8 செலவாகிறது. மேலும், இங்கே இறக்கு கூலி ரூ.1 கொடுக்கிறோம். எனவே, கொள்முதல் விலை ரூ.45 ஆகிறது.

இதனால் ஒரு இளநீரை ரூ.50-க்கு விற்பனை செய்கிறேன். வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார் அவர். இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து பதநீர், நுங்கு ஆகியவை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு நுங்கு தனியாக ரூ.10-க் கும், 6 நுங்குகள் ரூ.50-க்கும் விற்பனையாகிறது. ஒரு லிட்டர் பதநீர் ரூ.100 என்ற விலையில் விற்கப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் உள்ளூர் நுங்கு வரத் தொடங்கும். அப்போது விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நுங்கு, பதநீர் விற்பனையும் அதிகரித்துள்ளது.

விற்பனை அதிகரிப்பு: தர்ப்பூசணி கிலோ ரூ.20-க்கும், தர்ப்பூசணி ஜூஸ் ரூ.20-க்கும் விற்பனையாகிறது. கம்மங்கூழ் ஒரு கிளாஸ் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வமுடன் இவைகளை வாங்கி பருகுகின்றனர்.

பழச்சாறுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இயற்கை குளிர்பானங்கள் மீது மக்களுக்கு மோகம் அதிகரித்துள்ளதால், செயற்கை குளிர்பானங்களின் விற்பனை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT