மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020 ஜூன் கரோனா கட்டுப்பாட்டு நேரம் தாண்டி மொபைல் போன் கடையை திறந்து வைத்திருந்தது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
விசாரணையின் போது போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் என 9 பேரை கொலை வழக்கில் சிபிஐ கைது செய்தது.
கைதான நாளிலிருந்து 9 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் மொத்தம் 132 சாட்சிகள் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் நட்சத்திர சாட்சிகளான ரேவதி, பியூலா உட்பட 47 சாட்சிகளிடம் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். நான் கைதான நாளிலிருந்து 3 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறேன். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் என ஸ்ரீதர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறுக்கு விசாரணை என்ற பெயரில் 4 மாதங்களாக விசாரணையை இழுத்தடித்து வருகின்றனர். ஒரு சாட்சியை விசாரிக்க ஒன்றரை மாதங்கள் ஆகின்றன.
கோடை விடுமுறை காலத்திலும் சாத்தான் குளம் வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மனு மீதான தீர்ப்பை ஏப். 24-க்குநீதிபதி தள்ளி வைத்தார்.