சென்னை: ராணுவத்தில் ஆட்களை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு தொடங்கி உள்ளது.
இந்திய ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்தின்கீழ், இளநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
முன்பு, இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் உடல் தகுதி, மருத்துவ தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்நிலையில், இந்த ஆண்டு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதலில் கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கணினி ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு நேற்றுமுன்தினம் தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக, நாடு முழுவதும் 176 இடங்களில் 375 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, குன்றத்தூரில் உள்ள சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை, சென்னையில் உள்ள ராணுவ தேர்வாணைய அலுவலக அதிகாரி கர்னல் பத்ரே நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் இத்தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறும். எஜுகேஷன் கன்சல்டன்சி சர்வீஸஸ் இந்தியா லிமிடெட் என்ற மினிரத்னா நிறுவனம் மூலம் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு நடைமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு எழுதுவோர் வெகு தூரம் செல்ல வேண்டிய அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது'' என்றார்.