கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் இருந்த சிவலிங்கம் வெளியே தெரிந்தது. அதற்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். 
தமிழகம்

கன்னியாகுமரியில் பிரதோஷ நாளில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த சிவலிங்கம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல் உள்வாங்கியதால் அங்கிருந்த சிவலிங்கம் சிலை வெளியே தெரிந்தது. சிலைக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

கன்னியாகுமரியில் அவ்வப்போது கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் உயர்வது, அலையே இன்றி காட்சியளிப்பது போன்ற இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நேற்று முன்தினம் மாலையில் கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரைப் பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் திடீரென உள்வாங்கியது. இதனால் அந்தப் பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.

கடலுக்குள் பாறையில் செதுக்கப்பட்டிருந்த சுமார் 2 அடி உயர சிவலிங்கம் சிலையும் வெளியே தெரிந்தது. அந்த சிலையைப் பார்க்க கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். நேற்று முன்தினம் பிரதோஷம் என்பதால், பக்தர்கள் உடனடியாக அபிஷேகப் பொருட்களை சேகரித்து, சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினர். மாலை அணிவித்து, தீபாராதனை நடைபெற்றது.

அப்போது கடற்கரையில் திரண்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிவலிங்கத்தை வழிபட்டனர். நேற்று காலையில் கடல் மீண்டும் பழைய நிலைக்கே மீண்டதால் கடலுக்குள் சிவலிங்கம் மூழ்கியது.

SCROLL FOR NEXT