தமிழகம்

100 ஏக்கரில் அமையும் திரைப்பட நகருக்கு விரைவில் அடிக்கல்: பையனூரில் ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பையனூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் படப்படிப்பு தளங்களுடன் அமைக்கப்படவுள்ள திரைப்பட நகருக்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) நிர்வாகிகளுடன், மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ் திரைப்பட தொழிலாளர்களின் நலன் கருதி மாமல்லபுரம் அடுத்த பையனூர் கிராமம் கலைஞர் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு ஏற்ப அரங்குகளை அமைக்கவும் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைவில் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

முன்னேற்பாடுகள்.. இந்நிலையில், திரைப்பட நகருக்கான பணிகளை ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் மற்றும் பெப்சிதுணைத் தலைவரும் இசையமைப்பாளருமான தீனா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பெப்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சாலை விரிவாக்கம்: பின்னர் செய்தியாளர்களிடம் தீனா கூறியதாவது: பையனூரில் அமைக்கப்படும் திரைப்பட நகரத்தின் நுழைவுவாயில் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது. இதைவிரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

மேலும், திரைப்பட நகரின் நுழைவாயில் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆட்சியருடன் ஆய்வு மேற்கொண்டோம். பையனூர் திரைப்பட நகரத்தில், தற்போது ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இதற்கு முன்பு, சிறிய காட்சிகள் எடுக்க வேண்டும் என்றாலும் கர்நாடகா, கேரளா, மும்பை,ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டும்.

ஆனால், தற்போது இங்கு படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், இங்கேயே சில காட்சிகளை எடுத்துக் கொள்கிறோம். மேலும் சில படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடைபெற உள்ளன. இதன்மூலம், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு: இதனிடையே, திருப்போரூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இதன்படி கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வரும் முதியோர் காப்பகம் மற்றும் முட்டுக்காடு ஊராட்சி வாணியஞ்சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் நேற்று ஆய்வு செய்தார்.

குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களின் வருகைப் பதிவேடு, பெற்றோர் மற்றும் உறவினர் விவரம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் அறைகள், படுக்கை வசதி, கழிப்பறை வசதி போன்றவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை அவர் சாப்பிட்டு பார்த்தார். இதையடுத்து முதியோருக்கு இலவச வேட்டி, சேலை, குழந்தைகளுக்கு பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

SCROLL FOR NEXT