தமிழகம்

திருவள்ளூர் | தற்கொலைக்கு முயன்ற ஆரணி திமுக பெண் கவுன்சிலர்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியின் 13-வது வார்டு கவுன்சிலர் திமுகவை சேர்ந்த பொன்னரசி. இவர், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்த பேரூராட்சி கூட்டத்தின்போது, ‘பேரூராட்சியில் முறைகேடுகள் நடக்கிறது. இதனால், முறையான வரவு - செலவுகணக்குகள் காண்பிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பில் ஈடுபட்டார்.

அது மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் முறைகேடுகள் குறித்து புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் மர்ம நபர்கள் சிலர், பொன்னரசி மீதுஅவதூறு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஆரணி பஜார் வீதிஉள்ளிட்ட பகுதிகளில் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பேரூராட்சியின் முறைகேடுகளை தட்டிக்கேட்டதால், தன் மீது சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், தன் கணவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறி ஆடியோ வெளியிட்டு, நேற்று முன்தினம் மாலை அதிகளவு மாத்திரைகளை சாப்பிட்டு பொன்னரசி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதையறிந்த அவரது குடும்பத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT