தமிழகம்

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய் குழாய்கள் முழுவதும் அகற்றம்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: பட்டினச்சேரி கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 850 மீட்டர்நீளமுள்ள கச்சா எண்ணெய்க் குழாய்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டன என சிபிசிஎல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் சார்பில் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய்க் குழாயில் மார்ச் 2-ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் வெளியேறி கடல்நீரில் கலந்ததால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால், பட்டினச்சேரி மீனவர்கள் 5 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பட்டினச்சேரி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், குழாயில் எந்தவித எரிவாயுக்களையும் எடுத்துச் செல்லக் கூடாது என உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் சிபிசிஎல் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், குழாயை நிரந்தரமாக அப்புறப்படுத்துவது தொடர்பாக, நாகை மீன்வளத் துறைஅலுவலகத்தில் மார்ச் 16-ம் தேதி வருவாய்த் துறை, காவல் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் முன்னிலையில், மீனவர்களுடன் சிபிசிஎல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், மே 31-ம் தேதிக்குள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய்க் குழாய்களை நிரந்தரமாக அகற்றுவதாக சிபிசிஎல்நிறுவன அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி, பட்டினச்சேரிகடற்கரையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதைக்கப்பட்டிருந்த ராட்சத குழாய்களை அப்புறப்படுத்தும் பணியை சிபிசிஎல் நிறுவனம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதை ஆய்வுசெய்து, அதன்அறிக்கையை சமர்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம், மீன்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றை கொண்ட 5 பேர் குழுவை நியமித்தது. இக்குழுவினர், நேற்றுநாகை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கச்சா எண்ணெய் குழாயை அகற்றும் பணியை ஆய்வு செய்தனர். அப்போது, கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 850 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டன என சிபிசிஎல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT