கேஎஸ் அழகிரி | கோப்புப் படம் 
தமிழகம்

சமூக நீதிக் காவலரான இளையபெருமாளுக்கு மணி மண்டபம்: கே.எஸ்.அழகிரி வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: சமூக நீதிக் காவலரான இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் அவரது நினைவை போற்றுகின்ற வகையில் மணி மண்டபம் கட்டப்படும் என்ற முதல்வர் அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றிப் பெருக்கோடு வரவேற்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், பட்டியலின மக்களின் பாதுகாவலராகவும் விளங்கிய பெரியவர் எல்.இளையபெருமாளுக்கு, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் வருகிற ஜூன் 26ம் தேதி முதல் நூற்றாண்டு விழா கொண்டாடுவதென முடிவு செய்து, சிதம்பரத்தில் அவரது நினைவை போற்றுகின்ற வகையில் மணி மண்டபம் கட்டுவதென அறிவித்திருக்கிறார்.

இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றிப் பெருக்கோடு வரவேற்கிறேன். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு இணைந்து பணியாற்றியவன் என்ற முறையில் இந்த அறிவிப்பை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தமது வாழ்நாள் முழுவதும் பட்டியலின மக்களின் நலனுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடிய மனித நேயமிக்கவராக வாழ்ந்து, சமூக நீதிக் காவலராக விளங்கிய இளையபெருமாள் அவர்களது புகழை பரப்புகிற முயற்சியை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைவரது பாராட்டுகளையும் பெறுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்" என கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT