தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர் உதயா தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது: ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் தண்டபாணி என்பவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்த தன் மகன் சுபாஷை வெட்டிக் கொலை செய்தார். கொலையைத் தடுக்க முயன்ற தண்டபாணியின் தாய் கண்ணம்மாளும் கொலை செய்யப்பட்டார்.

படுகாயம் அடைந்த மருமகள் அனுசுயா (25) உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதல் திருமணம் செய்யும் பட்டியலினத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 129 படுகொலைகள் நடந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இதுபோன்ற படுகொலைகள் அதிகரித்துள்ளன.

இதுபோன்ற படுகொலைகளைத் தடுக்க, அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT