வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் ஆத்தூர் வெற்றிலை. படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் தூத்துக்குடி ஆத்தூர் வெற்றிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தமிழகத்தைச் சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் விளையும் வெற்றிலை அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. ஆத்தூர் வெற்றிலை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. மண், காற்றுவளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்கு காரணம். புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் ஆத்தூர் பகுதி வெற்றிலை விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.பி.சதீஷ்குமார் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் 6 ஊராட்சிகளில் வெற்றிலை சாகுபடி பல தலைமுறைகளாக நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 900 ஏக்கரில் வெற்றிலை விவசாயம் நடைபெற்றது. 15 டன் அளவுக்கு வெற்றிலை கிடைத்தது. விவசாய இடுபொருட்கள் விலையேற்றம், வேலை ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் சாகுபடி குறைந்து வருகிறது. தற்போது 350 ஏக்கர் அளவில்தான் நடைபெறுகிறது. தினமும் 2 டன் அளவுக்குதான் கிடைக்கிறது.

இங்கு சக்கை, மாத்து, ராசி, சன்னரகம் என 4 வகையான வெற்றிலை பயிரிடுகிறோம். இதில் இலை பெரியதாக இருக்கும் சக்கை,மாத்து ரகங்கள் தான் வெளி மாநிலங்களுக்கு அதிகமாக செல்கிறது. ஆத்தூர் வெற்றிலை தமிழகம் மட்டுமின்றி, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், டெல்லி, மும்பை, ஆக்ரா,பெங்களூரு, நெல்லூர், திருவனந்தபுரம் என, நாட்டின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.

புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், இனிமேல் உலகளவில் மவுசு கிடைக்கும். பல்வேறு நாடுகளுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யமுடியும். வெற்றிலையில் இருந்துமதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் வாய்ப்பு உருவாகி உள்ளது. குறிப்பாக வெற்றிலையில் இருந்து எசன்ஸ் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இதுபோன்ற திட்டங்களுக்கு அரசின் உதவி மற்றும் வங்கி கடனுதவிகளை பெற புவிசார் குறியீடு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT