மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நேற்று ஈடுபட்ட இந்திய விமானப் படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர். 
தமிழகம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டு தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர் - தமிழக வனத்துறை செயலர் ஆய்வு

செய்திப்பிரிவு

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் நேற்று ஈடுபடுத்தப்பட்டது.

கோவை ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதே கவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 11-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. கடந்த 6 நாட்களாக முழுமையாக அணையாமல், தீ தொடர்ந்து பரவியதால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நேற்று ஈடுபடுத்தப்பட்டது. இதுதவிர, வனப் பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தீயை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் மொகபத்ரா, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியது:

‘பாம்பி பக்கெட்’: கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஒரு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதில் இணைக்கப்பட்ட ‘பாம்பி பக்கெட்’-ல், மலைக்கு பின்புறம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டது. காலை 6.15 மணிக்கு முதல்முறை ‘பாம்பி பக்கெட்’ மூலம் காட்டுத் தீ பரவிய பகுதியில் நீர் தெளிக்கப்பட்டது. இவ்வாறு மாலை 5.45மணி வரை 10 முறை நீர் தெளிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சுமார் 3 ஆயிரம் லிட்டர் நீர் தெளிக்கப்பட்டது.

இதுதவிர, தீயை கட்டுப்படுத்தும் பணியில் உடுமலை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வனப் பணியாளர்கள், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனச்சரக பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டு விட்டது. தீ பரவும் இடம், வேகத்தை பொறுத்து இன்று (ஏப்.17) ஹெலிகாப்டரை மீண்டும் ஈடுபடுத்துவது குறித்து விமானப்படை முடிவு செய்யும். பெரும்பாலும் இன்றைக்குள் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT