கோவை: தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளது. ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய்விடும் என, பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியது தொடர்பாக அதிமுக துணை பொதுச் செயலாளர் முனுசாமி ஒரு கேள்வியை விடுத்துள்ளார். அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர். எனவே அவர் வெளியிட்டது பாஜகவின் கருத்துதான்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டதை கண்டித்து திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை உடனடியாக அனுமதி அளித்தது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு மட்டும் தொடர்ந்து தடை விதித்து வந்தனர். தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளது.
ஆளுநர் இன்டெலிஜென்ஸ் (உளவுத்துறை) அதிகாரி மட்டுமல்ல, இன்டெலிஜென்ட்-ம் (புத்திசாலி) ஆவார். ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய் விடும். பாஜகவிற்கு பிரச்சார பீரங்கியே ராகுல் காந்திதான். அவர் பேசிவிட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாக கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.