சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த 15 நாட்களில் ரூ.290 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதைசெலுத்திய 3 லட்சத்து 17 ஆயிரம் சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத்தும் சொத்துவரியில் 5 சதவீதம் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனங்களில் சொத்துவரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ரூ.1500 கோடிக்கு மேல் சொத்து வரிவசூலிக்கப்படுகிறது. சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டிலும், முதல் 15 நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 15-ம் தேதிக்குள் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
சொத்துவரியை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் சொத்து வரியை எளிதாக செலுத்த கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் வார விடுமுறை நாட்களில் தலா 170 இடங்களில் சொத்து வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
அதில்சுமார் ரூ.18 கோடிக்கு மேல் சொத்துவரி வசூலிக்கப்பட்டது.நடப்பு அரையாண்டில் 5 சதவீத ஊக்கத்தொகை பெறுவதற்கான அவகாசம் கடந்த 15-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த 15 நாட்களில்மொத்தம் ரூ.290கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது.