தாம்பரம்: சென்னை சோழிங்கநல்லூரில் ஓஎம்ஆர்- ஈசிஆர் சாலைகளை இணைக்கும் கலைஞர் கருணாநிதி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
ரூ.47 கோடியில் 1.7 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இந்தகால்வாய் அமைக்கும் பணிக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமாக உள்ளதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த பணி முடிவுற்றால் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும்.
அதேபோல பெருங்களத்தூர் - ராஜகீழ்பாக்கம் வரை 8 கி.மீ.தொலைவுக்கு ஈஸ்டர்ன் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. அந்தபணிகளை ஆய்வு செய்தார்.
இதனையடுத்து பெருங்களத்தூரில் ரூ.234.37 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் ரூ.29 கோடியில் குரோம்பேட்டை ராதா நகரில் நடைபெறும் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்தார். அப்போதுபணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அதேபோல் சென்னை திருவான்மியூர் முதல் அக்கரை வரை4 வழிச்சாலையாக உள்ள கிழக்குகடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அமைக்கும் பொருட்டுரூ.1,111 கோடி மதிப்பில் 10.50கி.மீ. நீளத்துக்கு நில எடுப்புடன் கூடிய சாலை அகலப்படுத்தும் பணியை அரசு தலைமைச் செயலர் ஆய்வு செய்து நில எடுப்பு மற்றும் கட்டுமானப் பணிகளைத் துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.
மேலும் சென்னை மத்தியகைலாஷ் சந்திப்பில் சர்தார் படேல் சாலையையும் ராஜீவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டு வரும் ரூ.59கோடி மதிப்பிலான சாலை மேம்பால பணிகளை ஆய்வு செய்தார்.
ராஜீவ் காந்தி சாலையில் இந்திராநகர் மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் ரூ.109 கோடி செலவில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் 2 `யு' வடிவ சாலை மேம்பாலங்களையும் ஆய்வு செய்து பணிகளைத் துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பிரதீப் யாதவ்,செங்கை ஆட்சியர் ராகுல்நாத், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.