தமிழகம்

அதிமுக தொண்டர்களுக்கு யாரிடமும் பயம் கிடையாது: ஜெயக்குமார் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக தொண்டர்களுக்கு எப்போதும், யாரிடமும் பயம் கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை ஒரு கருத்தைக் கூறினார். அதற்கு அதிமுக சார்பில் நான் பதில் தெரிவித்தேன்.

அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்கள் குறித்து தான் பதில்சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று பொதுச் செயலாளர் பழனிசாமி கூறிவிட்டார்.

நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அண்ணாமலை அரசியலில் 2 வருடமாகத்தான் இருக்கிறார். அரசியலில் அவரை கத்துக்குட்டி என்று கூறலாம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது.

திமுக குடும்ப ஆதிக்கம் நிறைந்த கட்சி. ஊழலில் திளைத்து,ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது திமுக ஆட்சி. அதை எதிர்க்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், கூட்டணியில் உள்ள அதிமுகவை எதிர்க்கக் கூடாது.

அண்ணமலையிடம் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. கருணாநிதி காலத்திலேயே பல்வேறு அடக்குமுறைகளைப் பார்த்தவர்கள் நாங்கள். அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்று அப்போது திமுகவினர் மும்முரமாக செயல்பட்டனர். எத்தனை வழக்குகள், எவ்வளவு பிரச்சினைகள்.

ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, அதிமுக மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. இன்னும் 100 ஆண்டுகளானாலும் அதிமுக வெற்றி நடைபோடும் இயக்கமாகவே இருக்கும். எப்போதும், யாரிடமும் அதிமுக தொண்டர்களுக்குப் பயம் கிடையாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

SCROLL FOR NEXT