தமிழகம்

மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் குற்றச் செயல்களை தடுக்க சிறப்பு ரோந்து போலீஸ் படை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை- நத்தம் பறக்கும் பாலத்தில் குற்றச் செயல்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ‘சிறப்பு ரோந்து போலீஸ் படை ’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்க காவல் ஆணையர் நரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மதுரை - நத்தம் சாலையில் 7 கி.மீ. நீள பறக்கும் பாலம் அமைக்கப்பட்டது. இந்த புதிய பறக்கும் மேம்பாலம் கடந்த 8-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

பகலைவிட, இரவில் இப் பாலத்தில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் தனியாக வாகனங்களில் செல்ல அச்சம் அடையும் சூழல் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த பாலத்தில் செல்போன் வழிப்பறி நடந்தது. இருப்பினும் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தி அந்நபரை பிடிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அந்நபர் தப்பி விட்டார்.

இதையடுத்து, மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவின்படி பாலத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க ‘மேம்பால சிறப்பு ரோந்து படை’ உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரிவு எஸ்ஐ ஒருவர் தலைமையில் காவலர்கள் இப் படையில் இடம் பெற்றுள்ளனர். இப்படையினர் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி போக்குவரத்தை கண்காணிப்பர்.

பாலத்தில் வாகனங்களை நிறுத்துவது, செல்ஃபி எடுப்பது, வாகனங்களில் சாகசம் செய்தல், பிறந்த நாளையொட்டி பாலத்தில் கேக் வெட்டுவது, பக்கவாட்டு சுவர்களில் அமர்ந்து அரட்டை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தர விட்டுள்ளார்.

இந்த ரோந்து படையின் செயல்பாட்டை போக்குவரத்து உதவி காவல் ஆணையர்கள் மாரியப்பன், செல்வன் உள்ளிட்டோர் கொடி யசைத்து தொடங்கி வைத்தனர்.

SCROLL FOR NEXT