சென்னை: கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாமலை புது இலக்கணம் வகுத்துள்ளார் என்று, பாஜக விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திமுகவினர் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கட்சியினரின் சொத்து, ஊழல் பட்டியலையும் வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, "அண்ணாமலை அதிமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டால், அவற்றைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மறைமுகமாக பூச்சாண்டி காட்டும் வேலை எங்களிடம் பலிக்காது. தைரியம் இருந்தால் எங்கள் கட்சிப் பெயரை அண்ணாமலை சொல்லிப் பார்க்கட்டும்" என்றார்.
பழனிசாமி விமர்சனம்: அதேபோல, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, "இப்படி பேட்டி கொடுத்து, பெரிய ஆளாக வேண்டுமென முயற்சிக்கிறார் அண்ணாமலை. அவரைப் பற்றிஎன்னிடம் கேட்காதீர்கள்" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், இவற்றுக்குப் பதில் அளிக்கும் வகையில், பாஜக விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், "ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம் வகுத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.