மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: கோடைகாலத்தில் எவ்விததடையுமின்றி சீரான முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. மின் தேவையை விட கூடுதலாக உபரி மின்சாரம் உள்ளது.
தமிழகத்தில் 50 மீட்டர் தொலைவுக்குள் இருப்பவை மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ளவை என 96 டாஸ்மாக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. புதிதாக டாஸ்மாக் கடைகள் எங்கும் திறக்கப்படுவதில்லை. ஒரு சில கடைகள் இடமாற்றம்தான் செய்யப்படுகின்றன. அவற்றை புதிய கடைகளை திறப்பது போல சிலர் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். மொத்தம் 596 கடைகள் மூடப்படுவது என்பது சாதாரணமானது அல்ல. மொத்த கடைகள் எண்ணிக்கையில் இது 11 சதவீதமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.