மேலக்கோட்டையூர்: மாணவர்கள் தங்கள் எதிர்கால நலன் கருதி, பெற்றோர் கூறும் அறிவுரைகளை கேட்டு செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜே. சத்தியநாராயண பிரசாத் கூறியுள்ளார்.
சென்னை விஐடியில் நேற்று பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஜி.விசுவநாதன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜே. சத்தியநாராயண பிரசாத் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். மொபிலிட்டி மற்றும் பிளாட்ஃபார்ம்ஸ், உபெர், பெங்களூரு நிறுவனத்தின் மூத்த இயக்குநர் டி.மணிகண்டன், ஸ்குவாட் குரூப் லீடர் நிறுவனத்தின் நிர்வாகி மீனாட்சி ஷான் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வி.ஐ.டியின் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ராம்பாபு கோடாலி, சென்னை வி.ஐ.டியின் இணை துணைவேந்தர், முனைவர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள, டீன்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஜி. விசுவநாதன் பேசும்போது, “வி.ஐ.டி சிறந்த கல்வியாளர்களை மட்டும் உருவாக்குவதில் கவனம் செலுத்துவதில்லை. சிறந்த குடிமகன்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. வி.ஐ.டி சென்னையில் சிறந்த மாணவர்களுக்கு தங்க பதக்கத்துடன் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். கல்வி, ஆராய்ச்சிக்கு அரசு அதிக நிதியை ஒதுக்கி கவனம் செலுத்த வேண்டும். மேலும், சுகாதாரத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தித் துறையில் சீனா 30 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ளது. இந்தியா 3 சதவீதம் தான் பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு நாட்டின் ஜி.டி.பி.யில் சுமார் 1 சதவீதத்துக்கும் குறைவாகத் தான் ஒதுக்கப்படுகிறது. சுகாதாரத்துக்கு ஜி.டி.பி.யில் 1.5 சதவீதம் தான் ஒதுக்கப்படுகிறது. இவற்றை அதிகரிப்பதன் மூலம் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை இந்தியா எட்ட முடியும்” என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ்.ஜே.சத்ய நாராயண பிரசாத் பேசும்போது, “மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனுக்காக, பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு செயல்பட வேண்டும். வாழ்வின் நல்ல நிலைக்கு வந்தவுடன் பெற்றோரை கைவிட்டு விடக் கூடாது. அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களுக்கு இருக்கிறது.
தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாக கருதி சோர்வடையாமல் கடுமையாக உழைத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோரின் ஆசீர்வாதங்கள் தான் வாழ்வில் மிக முக்கியம்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பல்கலைக்கழக தின விழாவில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.